Thursday, April 1, 2010

கத்துக் குட்டி

ஒரு மாணவன் நாடகத்தில் சிறுகதை பாடும் பாடகராக (Ballad Singer) வேண்டும் என்று ஆசிரியர் ஒருவரிடம் சென்று சேர்ந்தான். அந்த ஆசிரியரோ மிகவும் கடுமையானவர், அந்த மாணவனை ஒவ்வொரு நாளும் ஒரே கதையின் ஒரு பகுதி பாடலை மறுபடி மறுபடி பாடிக் காண்பிக்கச் சொன்னார். இது பல மாதங்களுக்கு நீடித்தது. புது பாடல்கள் பாடுவதற்கோ (அ) வேறு நுணுக்கங்களை கற்று கொள்வதற்கோ அந்த ஆசிரியர் அனுமதிக்க வில்லை.

ஒரு கட்டத்தில் மாணவன் பொறுமை இழந்து, அந்த இடத்திலிருந்து கிளம்பி வேறு ஒரு ஆசிரியரை தேடி சென்றான். ஒரு நாள் இரவு, செல்லும் வழியில் மனப்பாடமாக பாடும் பாடல் போட்டி ஒன்று நடந்தது. தோல்வி அடைந்தால் எதையும் இழக்க போவதில்லை என்பதனால், அந்த போட்டியில் கலந்து கொண்டு தனக்கு தெரிந்த அந்த ஒரே பாடலை பாடினான்.

அந்த போட்டியை நடத்தியவர், அவனை சிறப்பாக பாடியதாக வெகுவாக புகழ்ந்து முதல் பரிசினை அளித்தார். அவனோ தான் ஒரு கத்துக் குட்டி, இப்போதுதான் பாடக் கத்துக் கொள்வதாக கூறினான். உடனே போட்டியை நடத்தியவர், "உன்னுடைய குரு யார்?. அவர் உண்மையிலேயே சிறந்த ஆசிரியர். அவர் எங்கிருக்கிறார்?" எனக் கேட்டார்.

அதைக் கேட்ட மாணவன் மீண்டும் தனது முந்தைய ஆசிரியரிடமே சென்று பயின்றார். அப்புறம் என்ன அவர் வேறு யாரும் அல்ல, பிற்காலத்தில் கோஸிஜி என்றழைக்கப் பட்ட மிக சிறந்த நாடகப் பாடகர் தான் அந்த மாணவர்.

No comments:

Post a Comment