Thursday, April 1, 2010

முயற்சியில்லாமல் வெற்றி பெறுவது

சுகஹாரா பொகுடென் சிறந்த போர் வீரர். அவர் ஆரம்பித்த தற்காப்பு போர்பயிற்சிக் கலைப் பள்ளியின் பெயர் "முயற்சியில்லாமல் வெற்றி பெறுவது". மிகவும் புகழ் பெற்ற இந்த கதை அந்த பள்ளியின் பெயரையும், அங்கு கற்று தந்த கல்வி முறையையும் சொல்லுகிறது.

ஒரு முறை கிழக்கு ஜப்பானுக்கு செல்லும் பொழுது பொகுடென் படகு ஒன்றில் ஐந்து அல்லது ஆறு பேர்களுடன் பயனிக்க வேண்டி இருந்தது. அதில் பயனித்த தடியனும் முரடனுமான ஒருவன் சத்தமாக தன்னுடைய வலிமையைப் பற்றியும் தற்காப்புக் கலையில் (Martial Arts) தானே சிறந்தவன் என்றும் எத்தனை பேரை தான் வென்று இருப்பதாகவும் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்தான். மற்றவர்கள் அனைவரும் மிகவும் அமைதியாக இருந்தனர். மேலும் மேலும் தன்னுடைய வலிமையைப் பற்றி சுய தம்பட்டம் அடித்துக் கடுப்பேற்றினான்.
பொருத்துப் பார்த்த பொகுடென் கடைசியாக பொறுமை இழந்து "நல்லது. நாங்கள் அனைவரும் உன்னிடமிருந்து பல வகையான கதைகளை கேட்டு அறிந்தோம், நானும் சிறு வயதிலிருந்து தற்காப்புக் கலைகளை கற்று அதில் கூறிய படி நடந்து வருகிறேன். ஆனால் ஒரு நாளும் யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. எப்பொழுதும் எப்படி மற்றவர்களிடமிருந்து விழும் அடிகளிலிருந்து தப்பிப்பது என்றும் சண்டை என்று வந்தால் தோல்வியுறாமல் தற்காத்துக் கொள்வதுமே நான் பயின்றது" என்று அமைதியாக கூறினார்.

தன்னை எதிர்த்து பேசியதை பொருக்காத தடியன் "எந்த பள்ளியின் தற்காப்புக் கலையை பயின்று அதன் படி நடக்கிறாய்" என்று கேட்டான்.

பொகுடென் "முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறுவது (அ) தோற்காத வழி தேடுவதுதான் தான் பயின்ற பள்ளியின் பெயர்" என்று தயக்கமின்றி பதில் உரைத்தார்.

தடியன் "எதையும் முயற்சிக்காமலேயே வெற்றி பெறுவது என்றால் எதற்காக போர்வாளை உன்னுடைய இடையில் வைத்திருக்கிறாய்?" என்று கேட்டான்.

பொகுடென் "இரண்டு வாள்களான 'மனதை மனதால் தொடர்பு கொள்வது', 'கர்வத்தால் ஏற்படும் தற்பெருமையையும், கொடி போல வளரும் தீய எண்ணங்களையும்' வெட்டி எறியவே வைத்துள்ளேன்" என்று கூறினார்.
"அப்படியானால் போட்டிக்கு தயாரா, வா!, வந்து என்னுடன் சண்டையிடு, எப்படி முயலாமல் நீ வெற்றி பெறுகிறாய் என்று பார்த்து விடுகிறேன்" என முரடன் வீண் சண்டைக்கு அழைத்தான்.

பொகுடென் "இதுவரை எனது இதயமான வாள் வாழ்வை காப்பதற்கு தான் உபயோகப் பட்டது, ஆனால் இன்று எதிரி கெட்டவனாக இருப்பதால் வாழ்வை எடுக்கப் போகிறது" என்று சூளுரைத்தார்.
வீம்புக்காரன் மிகவும் ஆத்திரமடைந்து படகோட்டியை பார்த்து "இப்பொழுதே கரைக்கு ஓட்டு, இவனை ஒரு கை பார்த்து விடுகிறேன்" என்று குதித்தான்.

பொகுடென் இரகசியமாக படகோட்டியைப் பார்த்து கண் ஜாடை செய்து விட்டு, வீண் பெருமை பேசியவனைப் பார்த்து "படகை கரைக்கு ஓட்டுவது நல்லதல்ல, கரை படகுத்துரை ஆனதால் மக்கள் கூடும் இடம், போட்டியை அங்கு வைத்துக் கொள்ள வேண்டாம், நீ விருப்பப் பட்டால் நமக்கு முன்னால் கொஞ்சம் தூரத்தில் தீவு போல் தெரியும் மேட்டில் வைத்துக் கொள்ளலாம், படகில் இருப்பவர்கள் வீணாக நம்மால் நேரம் கடந்து செல்லத் தேவையில்லை" என்று கூறினார்.

படகோட்டி தீவுத் திடலுக்கு ஒட்டிச் சென்றான். தடியன் வேகமாக தீவில் குதித்து இறங்கி விட்டு "வா, இறங்கி வா!, உன் மண்டையை இரண்டாக பிளக்கிறேன்" என்று கத்திக் கொண்டே தன்னுடைய நீண்ட கத்தியை உரையிலிருந்து எடுத்தான்.
பொகுடென் "முயற்சியில்லாமல் வெல்வதற்கு முதலில் மனதை அமைதியடைய செய்ய வேண்டும், எனக்கு ஒரு நிமிடம் கொடு" என்று கூறி தன்னுடைய வாளை உருவி படகோட்டியிடம் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக துடுப்பை வாங்கிக் கொண்டார்.

பார்ப்பதற்கு பொகுடென் துடுப்பால் படகை நகர்த்தி கரைக்கு செல்வது போல் இருந்தது, ஆனால் வேகமாக படகை தண்ணீரில் இழுத்து துடுப்பைக் கொண்டு வேகமாக எதிர் திசையை நோக்கி படகை செலுத்த ஆரம்பித்தார்.
அதைப் பார்த்த ஜம்பவான், "எதற்கு நீ கரைக்கு வரவேண்டியது தானே?" என்று கத்தினான்.

பொகுடென் சிரித்துக் கொண்டே "எதற்காக! உனக்கு தேவையென்றால் நீந்தி இங்கே வா, நான் தரைக்கு எப்படி போவதென பாடம் எடுக்கிறேன், இதுதான் நான் கற்ற முயலாமல் வெற்றி பெறுவதன் பாடம்" என்று கூறி விட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி துடுப்பை போடலானார்.

No comments:

Post a Comment