Thursday, April 1, 2010

பாத்திரங்களும் சூத்திரங்களும்

ஜப்பானில் டெட்சுகன் என்ற ஸென் துறவி புத்தருடைய சூத்திரங்களை புத்தகமாக பதிப்பதற்கு முயன்றார். சைனிஷ் மொழியிலிருந்த சூத்திரங்களை மொழி பெயர்த்து ஜப்பானிஷ் மொழியில் 7000 புத்தகங்கள் பதித்து வெளியிடுவது என்று முடிவு செய்தார். ஆனால் அந்த காலத்தில் அது ஒரு கடினமான வேலை, புத்தகங்கள் பதிப்பதற்கு தேவையான மர உப கரணங்களும், பிற விதமான பொருட்கள் மற்றும் ஆட்கள் உதவியும் அவருக்கு தேவைப் பட்டது.
டெட்சுகன் எல்லா இடங்களுக்கும் பாத யாத்திரையாக சென்று பணம் திரட்டினார். சிலர் ஒரு சில நாணயங்களே தருவர், சிலர் தாரளமாக பொருள் உதவி செய்தனர். ஆனால் அவர் எல்லாரையும் சமமாக மதித்து அன்புடன் நன்றி கூறுவார். பத்து வருடங்கள் முடிவில் அவருக்கு தேவையான பணம் கிடைத்தது. அந்த சமயத்தில் உஜி ஆறு பெருக்கெடுத்து ஒடி எல்லா இடங்களையும் முழ்கடித்ததால் பஞ்சம் தலை விரித்தாடியது. அவர் தான் சேகரித்த எல்லாவற்றையும் மக்களுக்கு கொடுத்து அவர்களை பசியில் இருந்து காப்பாற்றினார்.
பிறகு இரண்டாவது முறையாக பல வருடங்கள் சேகரித்த பணத்தையும் தொற்று நோய் வந்து பெருமளவில் மடிந்து கொண்டிருந்த மக்களை காப்பதற்காக செலவழித்தார். இருபது வருடங்களுக்கு பிறகு அவருடைய சூத்திர புத்தகம் வெளி வந்து அவருடைய குறிக்கோள் பூர்த்தி அடைந்தது. உஜி ஆறு ஒடும் கியோடொ நகரில் உள்ள மடத்தில் இன்றும் அவருடைய முதல் பதிப்பு புத்தகம் உள்ளது.
ஜப்பானில் டெட்சுகன் துறவியினை பற்றி இன்றும் பேசும் போது, "அவருடைய மூன்றாவது சூத்திரத்தை விட, முதல் இரண்டு கண்ணுக்குத் தெரியாத சூத்திரங்கள் மிகவும் விலை உயர்ந்தது" என்று குறிப்பிடுவர்.

No comments:

Post a Comment