Thursday, April 1, 2010

இறந்தவனின் பதில்

பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராக விளங்கிய மாமியா, ஒரு சமயம் ஸென் ஆசிரியர் ஒருவரிடம் பயிற்ச்சிக்காக சென்றிருந்தான். "ஒரு கையின் ஓசை என்ன?" என்ற புகழ் பெற்ற புதிர்க் கேள்வி (கோஆன்) அவனிடம் கேட்கப் பட்டது.

மாமியா மனதினை ஒரு முகப் படுத்தி கேள்வியின் பதிலினைக் கண்டு பிடிக்க முயன்றான். ஆனால் நாட்கள் ஒடிக் கொண்டிருந்தது. ஆசிரியர் அவனைப் பார்த்து "நீ இன்னும் ஒழுங்காக மனதினை ஒரு முகப் படுத்த வில்லை, உனக்கு இந்த உலக இன்பங்களிலும், பணம், புகழ், உணவு மற்றும் சத்தங்களின் மீது இன்னும் பற்றுதல் இருக்கிறது. ஏன் நீ இறந்து விடக் கூடாது? அது உனக்கு எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும், என் கேள்விக்கான பதிலும் விரைவில் கிடைக்கும்" என்றார்.

அடுத்த தடவை சந்தித்த ஆசிரியர் மாமியாவிடம் "ஒரு கையின் ஓசை என்ன?" என்று மறு படியும் கேட்டார். உடனே மாமியா இறந்தவனைப் போல் சலனமில்லாமல் தரையில் படுத்துக் கொண்டான்.

அதைக் கவனித்த ஆசிரியர் "ஒ! நீ இறந்து விட்டாய?" என்று கூறியவர் மேலும் தொடர்ந்து "ஆமாம், அந்த ஓசையைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று வினவினார்.

ஆசிரியரை கிழே படுத்துக் கொண்டே பார்த்தவன், "அதற்கான பதிலை நான் இன்னும் கண்டு பிடிக்க வில்லை" என்று பதில் கூறினான்.

"செத்த மனிதன் பேசமாட்டான்" எனக் கடுமையுடன் கூறியவர், 'கெட் அவுட்' என்று கத்தினார்.(எனது கருத்து: "ஒரு கையின் ஓசை என்ன?" என்ற புதிர்க் கேள்வி புதிதாக சேரும் மாணவனிடம் அவனுடைய மனதினை ஒரு முகப் படுத்துவதற்காக கேட்கப் பட்டது. ஆசிரியர் "நீ இறந்து போக வேண்டியது தானே?" என்று கடிந்து கொள்வதாக தோன்றினாலும் உண்மையில் அவர் மாணவனை சாகச் சொல்லவில்லை. செத்தவர்களுக்கு மனம் உண்டா? பிணம் யோசிக்குமா?. பிணத்திற்கு குளிரும் வெப்பமும் ஒன்றுதானே?. அது போல சிந்தனைகளை ஒரு முகப் படுத்து. எப்பொழுது உன்னால் ஒருமுகப் படுத்த முடியும்?, எதனையும் இரண்டு நிலையுடன் பார்க்காமல் ஒரு நிலைப் படுத்தினால மட்டுமே, எண்ணங்களை அலசி சீர் தூர்க்கிப் பார்த்துக் கொண்டே இருந்தால் தியான நிலையை அடைய முடியாது. அதனை இலைமறைக் காயாக ஆசிரியர் வெளிப் படுத்துகிறார்.

மாணவன் ஆசிரியரின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்கிறான். ஆசிரியர் கேள்வி கேட்டவுடன் சலனமற்ற நிலையை நடித்துக் காட்டுகிறான். ஆனால் மனதின் உள்ளே இன்னும் சலனம் தீர்ந்த பாடில்லை. ஆசிரியர் அவன் உண்மையிலேயே மனதினை அறிந்து கொண்டான என்பதற்காக "அந்த ஓசையைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்கிறார். ஒசையை அறியாத நிலையை அடையாத அவனால் பிணமாக நடித்த போதிலும், ஓசையினைப் பிரித்துணர்ந்து அதற்கு அர்த்தம் கண்டு பதிலும் தெரியாது எனக் கூறுகிறான்.

உண்மையான பதிலை அறியாமல் சலனமற்ற பிணமாக நடிப்பதை விரும்பாத ஆசிரியர் "கெட் அவுட்" எனக் கத்துகிறார்.)

No comments:

Post a Comment