Thursday, April 1, 2010

கண்ணாடியான செங்கல்

சைனாவின் சூஷுவானில் பிறந்த சா'ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான்.

நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா'னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார்.

ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, "எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா'ன் தியானத்தினைப் பயில வேண்டும் என்கிறாய்?" என்று கேட்டார்.

"புத்தாவாக மாறுவதற்கு" என்று பதில் வந்தது.

உடனே பக்கத்தில் இருந்த செங்கல்லினை எடுத்து தேய்க்கலானார்.

இளம் துறவியான மாசூ, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான்.

"இந்த செங்கல்லினை கண்ணாடியாக மாற்றுவதற்காக வழவழப்பாக தேய்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

"செங்கல்லினை தேய்ப்பதால் மட்டுமே எப்படி கண்ணாடியாக மாற்ற முடியும்?" என்றான் மாசூ.

"நீ உட்கார்ந்த சா'ன் தியானத்தினை கற்பதால் மட்டுமே புத்தாவாக மாற முடியும் என்கிற போது நான் ஏன் செங்கல்லினை தேய்த்து கண்ணாடியாக மாற்ற முடியாது?" என்று கேட்டார் குரு ஹுவாய் ஜாங்.

கொஞ்சம் நேரம் குரு ஹுவாய் ஜாங் கூறியதை யோசித்துப் பார்த்த மாசூ, "ஆசிரியரே, என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்" என்றான்.

"நீ ஓட்டிச் செல்லும் கட்டை வண்டி தீடிரென நகராமல் நின்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்" என்ற ஹுவாய் ஜாங், "அந்த சமயத்தில் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டவர், பின்பு தொடர்ந்து, "உன்னுடைய எருதினை ஓட்டிச் செல்வாயா அல்லது கட்டை வண்டியை ஓட்டிச் செல்வாயா?" என்ற கேள்வியினைத் தொடுத்தார்.

மாசூவினால் எந்த பதிலினையும் சொல்ல முடியவில்லை. மேலும் தொடர்ந்த குரு "நீ உட்கார்ந்த நிலையில் சா'ன் தியானத்தினைக் கற்க விரும்புகிறாயா அல்லது 'உட்கார்ந்த புத்தா'வினையைக் கற்க விரும்புகிறாயா?. உனது விருப்பம் என்ன?" என்று கேட்டார். "நீ முதலில் கூறியதைக் கற்க விரும்பினால் அதனை உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது தூங்கிக் கொண்டேக் கூட பயிற்சி செய்யலாம். நீ இரண்டாவதாக கூறியதைக் கற்க விரும்பினால் புத்தருக்கு என குறிப்பிட்ட தோற்றநிலை இல்லை. உண்மையில் புத்தருடைக் கோட்பாடுகள் சமயக் கொள்கைகள் அல்ல. அதனால் அவருடைக் கருத்துக்கள் தத்துவமும் அல்ல. சித்தாந்தமும் அல்ல. உண்மையான வழியினை அடைவதற்கு உட்கார்ந்த சா'ன் தியானத்தினைப் பின்பற்றுவது புத்தாவை படுகொலை செய்வதற்கு சமம். அதனால் உன்னால் என்றும் உணமை வழியினை அடைய முடியாது." என்றார்.

குரு ஹுவாய் ஜாங் கூறியதைக் கேட்ட மாசூ தன்னுடைய உடலில் விசித்திரமான ஒளி புத்தத் தன்மையுடன் புகுவதைப் போல் உணர்ந்தான். மரியாதையுடன் கூறிய வணக்கத்தினைத் தெரிவித்து தன்னை அவருடைய சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டினான்.

No comments:

Post a Comment